'மந்தையிலே நின்னாலும் வீரபாண்டி தேரு' என்பதை மற்றுமொருமுறை நிருபித்திருக்கிறார் பாரதிராஜா. காதலின் தீராத பக்கங்களில் செலுலாய்டு கவிதை எழுதி வந்தவர், இந்த முறை தொட்டிருப்பது மிரள வைக்கும் த்ரில்லரை!
சினிமாவுக்குள் சினிமா. இதே டைப் கதைகளை எக்கச்சக்கமாக பார்த்திருக்கும் தமிழ்சினிமாவுக்கு புதுசாக ஒரு பொம்மலாட்டம் காட்டியிருக்கிறார் ராஜா.
பிரபல இயக்குனரான நானா படேகர் மீது மூன்று கொலைப்பழிகள். தனது படத்தின் கதாநாயகியான ருக்மணியை காரோடு மலையுச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார் என்பது அவற்றில் ஒன்று. விசாரணை அதிகாரியாக வருகிறார் அர்ஜுன். 'ஷாட், கட்' என்று சொல்வதை கூட 'ஷூட், கட்' என்பார் போலிருக்கிறது நானா படேகர். அப்படி ஒரு கோபக்கார இயக்குனரான இவர் சி.பி.ஐ கஸ்டடியில். தம்மடித்துக் கொண்டே பதில் சொல்கிற படேகரின் திமிர், கலைஞனுக்கேயுரிய கர்வம். மேற்படி கொலைகளை யார் செய்திருப்பார்கள் என்ற தீப்பொறி கேள்வியோடு வேக வேகமாக நகர்கிறது படம். முடிவு? யூகிக்கவே முடியாத அதிர்ச்சி!
ஒரு சின்ன பார்வையிலேயே தான் எம்மாம் பெரிய நடிகர் என்பதை புரிய வைத்துவிடுகிறார் நானா படேகர். ஸாரி, நானா 'பலே'கர்! தனது கட்டைவிரல் தோஸ்திடம் கேள்வி கேட்டு முடிவெடுக்கும் இவரது ஸ்டைல் பயங்கரம்! ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அவமானப்படுத்தும் மனைவியை பொறுத்துக் கொண்டு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறாரே, அந்த காட்சி ஒன்று போதும்... நானா படேகரின் வலிமையை சொல்ல! சர்வ அலட்சியமும் பொருந்திய மகா கலைஞனாக திரையில் உலவியிருக்கிறது இந்த வட நாட்டு புயல்!
ஆக்ஷன் கிங், இந்த படத்தில் நம்பியிருப்பது புஜத்தையல்ல, நடிப்பென்ற நிஜத்தை! இந்தியாவே மதிக்கக் கூடிய ஒரு இயக்குனரை, தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த பின்பும், அவரை மரியாதையாக நடத்துவது, கொலையாளி இவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் போன பின்பும், அந்த கொலை கேஸை அதோடு விட்டு விடாமல், வேர் வரைக்கும் தேடிப் போவது என்று புது ‘ரன்னிங்’ அர்ஜுனிடம். காஜல் அகர்வாலுக்கும் இவருக்குமான காதல், கதையோட்டத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை என்பது சப்!
ராஜா அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஆர்’ வரிசை ஹீரோயின்களில், ருக்மணி நிற்பது ‘ஜோர்’ வரிசையில்! இறுதி காட்சிகளில் இதுவரை பார்த்த ருக்மணிதானா? என்று பிரமிக்க வைக்கிறார். பேச வேண்டிய அத்தனை வார்த்தைகளையும் இவரது கண்களே பேசி விடுவது ஆச்சர்யம்!
ஊர் பெரியவர் மணிவண்ணனின் இம்சைகளும், இச்சைகளும் கொஞ்சம் கலகலப்பு. கொஞ்சம் அலு அலுப்பு! கிராமத்தில் ஒரு கூட்டமே உட்கார்ந்து கிசுகிசுவை படித்து சீரியஸாக டிஸ்கஸ் பண்ணுவது சிரிப்பை வரவழைக்கிறது. “ஜெயம் ரவிக்கும் பரவை முனியம்மாவுக்கும் காதலா? ரொம்ப பேட் டேஸ்டா இருக்கே” என்று விவேக் கூறும்போது தில்லானா ஆடுகிறது தியேட்டர்.
“பிரகாஷ்ராஜுக்கு பதிலா வேற நடிகரை பாரு. அவரு ஒரே பேமென்ட்டா கேட்கிறாராம்”. “கிழவனை பார்றா, ஹீரோயினை பிராக்கெட் பண்ண அலையுறான்” இப்படி படத்தில் வரும் வசனங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி.
ஹிமேஷ் ரேஷ்மையாவின் பாடல்களில் டோலா டோலாவை கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பின்னணி இசையை வேறொருவர் கவனித்திருக்கிறார். (இளையராஜா போல் வருமா?) பி.கண்ணனின் ஒளிப்பதிவில் இருவேறு பகுதிகள். பிளாஷ்பேக்குகளுக்கு இவர் கொடுத்திருக்கும் தனி கலர் கவனிக்கத்தக்கது. வெள்ளை நிற தேவதைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டாலும், சூப்பர் இம்போஸ் விஷயத்தில் அப்படியே இருக்கிறார் இயக்குனர் இமயம். சில எடிட்டிங் யுக்திகளும் அப்படியே!
என்றாலும், இக்கால இயக்குனர்கள் முன் முஷ்டியை உயர்த்தி, குஸ்தியிலும் ஜெயித்திருக்கிறார் பாரதிராஜா.
Thanks: tamilcinema.com
3 comments:
படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றது உங்கள் விமர்சனம், நன்றி
வருகைக்கு நன்றி கானா பிரபா.
நீண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு ரசித்த தமிழ் சினிமா.
கமல் & மம்மூட்டி காம்பினேஷனில் தமிழிலும் மலையாளத்திலும் வந்திருந்தால் இரண்டு மொழியிலும் சூப்ப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
கமல் மிஸ் பண்ணிட்டார்.
நம்ம ரசிகர்கள் இன்னும் 4 பாட்டு 5 fight மட்டுமே தான் சினிமா என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
பாரதிராஜா தன்னை மீண்டும் நிருபித்திருக்கிறார்.
விமர்சனமும் நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்.
Post a Comment